Monday, June 28, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு







உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் (27/06/10) நிகழ்ச்சிகள்


தமிழில் சிறந்த மென்பொருளை தயாரித்ததற்காக, "பனேசியா டிரீம் வீவர்ஸ்" மென்பொருள் நிறுவனத்துக்கு கணியன் பூங்குன்றனார் விருதை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் (27/06/10) நிகழ்ச்சியில் இவ்விருதை முதல்வர் வழங்கினார்.
 விருதுடன் ரூ. 1 இலட்சமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
 இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
 நிறைவு விழா நிகழ்ச்சிக்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார்.
 மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.
 துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், நிதி அமைச்சர் க. அன்பழகன், மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, ஆ. இராசா, தயாநிதி மாறன், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி, மாநாட்டின் சிறப்பு அலுவலர் அலாவுதீன், கோவை மாவட்ட ஆட்சியர் பி. உமாநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.
 நன்றி:- தினமணி
  
யாரும் பணம் வாங்கலை!
தாம் இசையமத்த செம்மொழிப் பாடலை,கௌதம் மேனன் தான் படம்பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இரஹ்மான், தமிழை உலகளாவிய ஒரு விஷயமாக இந்தப் பாடலின் மூலம் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்றாராம்.
அரசு தரப்பிலிருந்து ஒருங்கிணைப்பு செய்த கனிமொழியோ தமிழ்ப் பாரம்பரியம் பரிமளிக்க, மண் வாசனையோடு இருக்க வேண்டும் என்றாராம்.
 இரண்டையும் சமன் செய்து படம் பிடித்தது பெரிய சவால்தான் என்கிறார் கௌதம்.
வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் கடலை ஒட்டி, செம்மொழியான தமிழ் மொழியே என்ற மெகா சைஸ் எழுத்துக்களின் பின்னணியில், ஒரு பிரம்மாண்டமான மேடையில், சீனியர் மோஸ்ட் டி.எம்.எஸ்., பி.சுசீலா தொடங்கி ஷ்ருதி ஹாசன் வரை மொத்தம் 40 பாடகர், பாடகிகள் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.
 இவர்களில் அருணா சாயிராம், சௌம்யா, டி.எம்.கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ போன்ற கர்நாடக இசைப் பாடகர், பாடகிகளும் உண்டு.
 யேசுதாசும், எஸ்.பி.பி.யும் வெளிநாட்டில் இருந்ததால், இதில் பங்கேற்க முடியவில்லை.
 மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் பின்னணியில் மணலில் சின்னதாக ஒரு மேடைபோட்டு, பரத நாட்டியம் ஆடியிருப்பவர் ஸ்ரீநிதி சிதம்பரம்.

புதுமணத் தம்பதிக்கு ஆரத்தி எடுத்து அவர்கள் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போது, அவர்களுக்கு நல்வரவு வண்ணக்கோலம்
 மனைவி ஆச்சர்யமாய்ப் பார்க்க கணவன் வாணலியிருந்து தமிழ் எழுத்துக்களின் வடிவில் முறுக்கு செய்வது,
 டைடல் பார்க்கில் முதல் நாள் வேலைக்குப் போனதும், இலேசான பயத்துடன் கம்ப்யூட்டரைத் தட்ட, இன்டர்நெட், தமிழ், விக்கிபீடியா என்று அடுத்தடுத்து திரையில் தோன்ற ஆச்சர்யப்படும் கிராமத்து யுவதி,

 கிராமத்துப் பெண்,
 அப்பாவின் டிராக்டரை ஓட்டியபடியே நிலத்தில் ண போடுவது, சுவரில் சித்திரம் வரைந்து முடித்து ஓவியர் ஸ்டைலாக எழில் என்று கையெத்திடுவது
எனப்பாடல் நெடுக கௌதம் மேனனின் முத்திரைகள்.
 பண்டைய கல்வெட்டுகளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் முதல் இன்றைய கம்ப்யூட்டர் எழுத்துருக்கள் வரை விதம் விதமான தமிழ் எழுத்துக்களைப் பாடல் முழுவதிலுமாகப் பயன்படுத்தியிருக்கிறேன்.
 பாடலுக்கு மதிப்பைக் கூட்ட, கன்னியாக்குமரியில் துவங்கி சென்னை வரை, தமிழ்நாடு நெடுக ஹெலிகாப்டரில் இரண்டு நாட்கள் பயணம் செய்து, ஏராளமான ஏரியல் ஷாட்கள் எடுத்தேன்.
 வானில் பறந்து ஏரியல் ஷாட் எடுக்க மத்திய அரசு அனுமதிப்பதில்லை.
 ஆனால், செம்மொழி மாநாட்டுக்காகச் சிறப்பு அனுமதி பெற்று, எடுத்த அத்தகைய ஷாட்களைப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பி, அவர்கள் அனுமதிக்குப் பிறகே அவை பயன்படுத்தபட்டன.
 பாடலுக்காக முதல்வர் கலைஞரைப் படம்பிடிக்க வேண்டும் என்றதும், அவர் உடனடியாக ஒப்புக் கொண்டதும், நான் கேட்டுக் கொண்டபடி கையெத்திடுவது போல, யோசிப்பது போல, படிப்பது போல எல்லாம் செய்து ஒத்துழைத்தது எனக்குக் கிடைத்த அரிய அனுபவம் என்கிறார் கௌதம்.
 இந்தப் பாடலுக்கு இசையமைத்தற்காக இரஹ்மானோ, பாடியதற்காக பாடகர்களோ, படம்பிடித்ததற்காக கௌதம் மேனனோ, யாருமே பணம் வாங்கிக் கொள்ளவில்லை என்பதுதான் விஷேஷமான நெகிழ்ச்சி.

மௌலி
 நன்றி:- கல்கி

"உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நேரடிச் செலவாக 68 கோடி ரூபாய் செலவாகி உள்ளது,'' என்று, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களுக்கு நேற்று (28/06/10) அவர் அளித்த பேட்டி:-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்கவிழாவான, ஜூன் 23 அன்று, பந்தலில் இருந்த மக்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சம். அன்று மாலை நடந்த அலங்கார ஊர்திகளின் எழிலார் பவனியை, சாலையின் இரு புறமும் நின்று கண்டு களித்தோரின் எண்ணிக்கை ஐந்து இலட்சம்.
ஜூன் 24 முதல் 26 வரை, மாநாட்டுப் பந்தலில் நடந்த கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் தினமும் ஒன்றரை இலட்சம் பேர் பங்கேற்றனர். பொதுக்கண்காட்சியை மணிக்கு 3,000லிருந்து 4,000 பேர் வரை பார்வையிட்டனர். நான்கு நாட்களில், ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலரில், 129 கட்டுரைகளும், 34 கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.
மாநாட்டில் கலந்து கொண்ட அறிஞர்கள் 3,100 பேருக்கு சிறப்பு மலர் வழங்கப்பட்டன.

மக்கள் 2,300 பேர், விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

பல்வேறு ஏடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட மலர்கள், கணக்கில் கொள்ளப்படவில்லை.

தமிழ் இணைய மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை 110.

மாநாட்டில் பதிவு பெற்று பங்கேற்றவர்கள் 300 பேர்.

தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற 200 பேரையும் சேர்த்து இம்மாநாட்டில் 500 தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இணைய மாநாடு சிறப்பு மலரில், 130 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

பொதுக்கண்காட்சிக்கு வந்த மக்களில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தினமும் இணைய கண்காட்சியையும் பார்வையிட்டனர்.

தினமும் ஒரு முகப்பரங்கம் என்ற அளவில் நடந்த நான்கு முகப்பரங்கங்களில், ஒவ்வொன்றிலும் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரசால் மானியம் வழங்கப்பட்ட உணவுக் கூடங்களில், நான்கு இலட்சம் பேருக்கு 30 ரூபாய்க்கு சலுகை விலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

வெளிநாட்டு, உள்நாட்டு அறிஞர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் 2,605 பேர், 92 ஓட்டல்களில் உள்ள 1,642 அறைகளில் தங்கியிருந்தனர்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளுக்காக நேரடிச் செலவாக 68 கோடி ரூபாய் செலவானது.

இந்த மாநாட்டையொட்டி, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், புதிய சாலைகள், இணைப்புச்சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புக்கு 243 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக நடந்த ஆய்வரங்கங்களில், 239 அமர்வுகளில் 55 பொருண்மைகளில் 913 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

மாநாட்டுக்காக, 50 வெளிநாடுகளில் இருந்து 840 பேர் கலந்து கொண்டனர்.

இவர்களில் கட்டுரை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 152.
  
இலங்கையிலிருந்து 38
மலேசியாவிலிருந்து 23
சிங்கப்பூரிலிருந்து 22
அமெரிக்காவிலிருந்து 14
கனடாவிலிருந்து 11
இங்கிலாந்திலிருந்து 9
ஜெர்மனியிலிருந்து 5
ஆஸ்திரேலியாவிலிருந்து 4
மொரீஷியசிலிருந்து 3

என்ற எண்ணிக்கையில் அறிஞர்கள் வந்து கட்டுரை சமர்ப்பித்தனர்.
இவற்றைத் தவிர்த்து,

பிரான்ஸ்
சீனா
செக் குடியரசு
ஹாங் காங்
கிரீஸ்
நெதர்லாந்து
பின்லாந்து
ஜப்பான்
நியூ சிலாந்து
தென்னாப்ரிக்கா

நாடுகளிலிருந்தும் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இங்கு வந்து, கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

பேட்டியின்போது, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கனிமொழி எம்.பி., மாநாட்டு சிறப்பு அலுவலர் அலாவுதீன், மாவட்ட ஆட்சியர் உமாநாத், கோவை மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபு உட்பட பலர் உடனிருந்தனர்.

பட்டியலும், பாராட்டும்:-

நேற்றைய (28/06/10) பத்திரிகையாளர் சந்திப்பின்போது, முதல்வர் கருணாநிதி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார். பேட்டியைத் துவக்கும் முன், அனைத்து பத்திரிகையாளர்களையும் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்த முதல்வர், "வணக்கம், வாழ்த்துக்கள், நன்றி" என்றார்.

ஜனாதிபதி, கவர்னர், மத்திய அமைச்சர்கள் துவங்கி, மாநாட்டுப் பந்தல் அமைத்த பந்தல் சிவா வரையிலும் நீளமாக பெயர்ப் பட்டியலை வாசித்து, அத்தனை பேருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார் முதல்வர். குறிப்பாக, காவல்துறையினருக்கு நன்றி கூறிய அவர், "சிறு பிரச்னை கூட எழாத அளவுக்கு 11 ஆயிரம் பேரைக்கொண்டு பாதுகாப்புப் பணியைச் சிறப்பாகச் செய்ததற்காக காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
சிறப்பாக நன்றிக்குரியவர்கள் என்று பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினரைக் குறிப்பிட்டு புன்னகைத்தார்.

எல்லாரையும் விட, அமைதியோடும், மகிழ்ச்சியோடும் இந்த மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார் முதல்வர்.
நன்றி:- தினமலர் 






தமிழுக்கென்றே அமைந்த மேடையில் தமிழைப் பற்றிப்பேச எண்ணற்ற செய்திகள்
இருக்கத் தொண்டர்கள் ஏதேதோ பேசிவருவதைக் கேட்கிறோம்.


ஐரோப்பியக் கூட்டமைப்பின் மேடையில் டாக்டர் கலாம் அவர்கள்
பூங்குன்றனாரின் பொருத்தமான வரியைக் கூறினார்.


டாக்டர் கலாம் அவர்கள்  குடியரசுத் தலைவராக இருந்தபோது,  ஐரோப்பியக்
கூட்டமைப்பின் பாராளுமன்றத்தில்  அவர்களது  பொன்விழாவை ஒட்டி ஒரு
சிறப்புரை ஆற்றினார்.


அப்போது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் வரியையும்,  அதன்
விளக்கத்தையும் அவர் கூறுவதைக் கேட்க –


http://www.youtube.com/watch?v=Uu-0vTOHJ44


(நன்றி : Prime Point ஸ்ரீநிவாஸன்)


யாதும் ஊரே,  யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன ;
சாதலும் புதுவது அன்றே,  வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே;   மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே


                                                      
கணியன் பூங்குன்றனார்


  ( புறநானூறு 192)

No comments:

Post a Comment